செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல் குமார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்த, SBI வங்கியின் சென்னை சௌகார்பேட்டை கிளைக்கு சென்றுள்ளார். 900 ரூபாய் செலுத்த வேண்டும் என்று படிவத்தில் குறிப்பிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியின் காசாளரிடம் அவர் வழங்கியுள்ளார்.
ஆனால், அவர் வழங்கிய ஆயிரம் ரூபாயையும், காசாளர் டெபாசிட் செய்துவிட்டார். மீதம் உள்ள 100 ரூபாய் குறித்து கேட்டதற்கு, டெபாசிட் செய்த நபரிடமே சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்று மெத்தனமாக பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மல் குமார், வங்கி மேலாளரிடம் புகார் அளித்தார்.
ஆனால், அவர் அதை தட்டிக் கழித்ததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வங்கியின் சர்குலர் ஆபிசில் புகார் அளித்தார். அங்கும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆனால், அங்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், வங்கி நிர்வாகம் ரூபாய் 65 ஆயிரம் அபாரத தொகையை நிர்மல் குமாருக்கு வழங்கிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.