தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராட குவிந்த பக்தர்கள்..!

தை அமாவாசையை முன்னிட்டு தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராட பக்தர்கள் குவிந்தனர். இதனால் காவல் நிலைய போலீசார், கடலோர காவல் குழும போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்துக்களின் முக்கிய நாட்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் மிகச் சிறந்ததாகும். தை அமாவாசையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில் பக்தர்கள் நீர் நிலைகளில் புனித நீராடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தை அமாவாசை இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனால் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிகாலை 4 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் நீரில் நீராட குவிந்துள்ளனர்.

கடற்கரையில் அமர்ந்து எள், பச்சரிசி, தர்ப்பை மற்றும் பூக்களை கொண்டு மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதன் பிறகு கடலில் புனித நீராடி கடற்கரையில் உள்ள விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கன்னியாகுமரி கடற்கரை மட்டுமல்லாமல் பகவதி அம்மன் கோயில், கன்னியாகுமரி பேருந்து நிலையம், இருசக்கர வாகன நிறுத்தமிடம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தர்ப்பணம் கொடுப்பவரின் பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர கண்காணிப்புக்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோன்று கடல் நீரில் இறங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

RELATED ARTICLES

Recent News