நாமக்கல்லில் அமைந்துள்ள பலபட்டறை மாரியம்மன் கோயில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக பாப்பாயி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு கடந்தாண்டு மார்ச் 25-ம் தேதி வழங்கப்பட்டது.
இதில், பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்ட வேண்டும் என எந்த கடவுளும் கேட்கவில்லை, கடவுளின் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது. கடவுளே ஆக்கிரமித்தால் அதனை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடும். எனவே கோயில் நிர்வாகம் கட்டியுள்ள கட்டுமானங்களை இரு மாதங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பிறகு கோவில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணியில் இன்று அதிகாலை முதலே நகராட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10 மணிக்கு மேல் இந்த பணிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாலை முதலே ஜேசிபி வாகனங்கள் கொண்டு இதனையடுத்து வடக்குபுற சுவர் செல்லாண்டி அம்மன் கோவில், உற்சவர்கள் வைக்கும் அறை உள்ளிட்ட கட்டிடங்களை இடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் நகராட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயில் இடிக்கப்பட உள்ள நிலையில் கோவிலை சுற்றி டிஎஸ்பி தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.