போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வாங்கிய நபர், கோவை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோவை விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகளை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தபோது அன்வர் உசேன் என்பவரை சோதனை செய்தனர்.
அப்பொழுது அன்வர் உசேன் கொடுத்த ஆவணங்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அன்வர் உசேனை தேசிய கீதம் பாடலை பாடி காட்டும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் அவருக்கு தேசிய கீதம் தெரியாமல் இருந்ததால் அன்வர் உசேனிடம் இமிகிரேஷன் அதிகாரிகள் மேற்கொண்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
அப்பொழுது அவர் பங்களாதேஷை சேர்ந்தவர் என்பதும் போலியான ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட்டை பெற்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து விமான நிலைய அதிகாரி கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பெயரில் பீளமேடு போலீசார் அன்வர் உசேனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.