சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பேயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன். 38 வயதாகும் இவருக்கு, கோகிலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக, அடிக்கடி சண்டை போட்டு வந்த நிலையில், கோகிலா தற்போது கணவனை பிரிந்து, தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார்.
இதுதொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. குழந்தைகள் 2 பேரையும் கலையரசன் தான் கவனித்து வருகிறார். இந்நிலையில், தனது குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, கோகிலா காவல்நிலையத்தில் மனு அளித்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் என்று கலையரசனிடம் கூறினார்.
ஆனால், அப்பாவை விட்டு வரமாட்டேன் என்று இரண்டு குழந்தைகளும் கதறி அழுதுள்ளனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்காத கோகிலா, தனது இரண்டு குழந்தைகளை தரையிலேயே தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இதனை பொறுத்துக் கொள்ளாத கலையரசன், தனது குழந்தைகளை மீண்டும் தன்னுடனே அழைத்துச் சென்றுவிட்டார்.
இதனால், கடும் கோபம் அடைந்த கோகிலா, மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, குழந்தையை அனுப்பி வைக்க வேண்டும் என்று காவல்துறையினரும் கூறியுள்ளனர். அப்போது தான் அடுத்த வாரம் வருகிறேன் என கூறி குழந்தைகளை சமாதானம் செய்து விருப்பமின்றி தாயுடன் அவர் அனுப்பி வைத்தார்.