விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்தவர் சின்ன வைரவன் மற்றும் ரோகினி தம்பதியினர். அவர்களுக்கு சுகானா (4) மற்றும் வைரலட்சுமி(7) என இரண்டு மகள்கள் உள்ளனர்.
குழந்தைகள் இருவரும் விருதுநகரில் உள்ள தனியார் LKG மற்றும் 2ம் வகுப்பு படித்து வருகின்றனர். சுகானா மற்றும் வைரலட்சுமி இருவரும் யோகா மீது உள்ள ஆர்வத்தால் கடந்த ஒரு வருடமாக யோகா கற்று வருகின்றனர்.
இந்த நிலையில் யோகாசனத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் சிறு வயதிலேயே யோகாவில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 மாதமாக இருவரும் முட்டைமேல் அமர்ந்து ஹனுமனாசனம், மற்றும் விபத்த பட்சி மோத்தாசனம் யோகாவில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று சாத்தூர் அருகிலுள்ள தனியர் பொறியியல் கல்லூரியில் சிறுமி சுகானா 120 முட்டை மேல் அமர்ந்து அனுமன் ஆசனத்தை தொடர்ந்து 30 நிமிடம் செய்தார்.
மேலும் சிறுமி வைரலட்சுமி 30 முட்டை மேல் அமர்ந்து இருகைகளிலும் தண்ணீர் டம்ளரை பிடித்துக்கொண்டு விபத்த பட்சி மோத்தாசனா யோகாவில் தொடர்ந்து 30 நிமிடம் செய்து காண்பித்து உலக சாதனை படைத்தார்.
இந்த உலக சாதனையை நோபில் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் பதிவு செய்தனர். மேலும் உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.