நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரியை அடுத்த மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை. இவர் மீது கொலை, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு மஞ்சங்குளம் பேருந்து நிலையம் அருகே சாமிதுரை நின்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சாமிதுரையை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சாமிதுரை கொலை வழக்கில் தொடர்புடைய முருகேசன் மற்றும விக்டர் ஆகிய இருவர் ராதாபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனையெடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.