ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, திமுக மற்றும் கூட்டணி கட்சியினரும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரும், தேமுதிக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சியினரும் மும்மரமாக பணிபுரிந்து வந்தனர். இதில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மற்ற கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் உடனே அறிவிக்கப்பட்டார்கள். ஆனால், அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுகவின் சார்பில், தென்னரசு போட்டியிடுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
பாஜகவின் நிலைப்பாடு எதுவும் வெளியாகாமல் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக இவ்வாறு வேட்பாளரை நியமித்துள்ளது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. K.S.தென்னரசு 2001, 2016 ஆகிய ஆண்டுகளில், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.