மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பயோ டெக்னாலஜி படித்து வந்தார். இவரது முகம் கருப்பாகவும், பொலிவில்லாமலும் இருந்ததால், பியூட்டி பார்லருக்கு சென்று, மலிவான ஃபேர்னஸ் க்ரீம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை பயன்படுத்த தொடங்கிய சில நாட்களிலேயே முகம் அதிக பொலிவுடன் மாறியுள்ளது.
இளம்பெண்ணின் முகம் அழகாக மாறியதையடுத்து, அவரது தாயும், சகோதரியும், அந்த ஃபேர்னஸ் க்ரீமை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து 3 மாதங்களுக்கு அந்த க்ரீமை பயன்படுத்தி வந்த நிலையில், இளம்பெண்ணுக்கும், அவரது சகோதரி, தாய்க்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண்ணின் கிட்னி பாதிக்கப்பட்டதால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், அந்த ஃபேர்னஸ் க்ரீமை ஆய்வகத்தில் பரிசோதித்து பார்த்தனர். அதில், மெர்குரி எனும் வேதிப்பொருள் அதிக அளவில் சேர்த்திருப்பது தெரியவந்தது. அதாவது, ஒரு பி.பி.எம் என்ற அளவில் சேர்க்க வேண்டிய மெர்குரி, 1000 பி.பி.எம் என்ற அளவில், அந்த ஃபேர்னஸ் க்ரீமில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், விலை மலிவாக கிடைக்கிறது என்ற காரணத்தால், தேவையில்லாத க்ரீம்களை பயன்படுத்தினால், இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிவித்தனர். மேலும், முகம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால், தோல் நல நிபுணர்களை அனுகி, அந்த பிரச்சனைக்கு ஏற்ற சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது என்றும் கூறினர்.