கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையான ஜே.எல்.கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான இந்த நகைக்கடை கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு 9.45 மணி்க்கு நகை கடையின் பூட்டிவிட்டு ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஸ்ரீதர் சென்றுள்ளார். இன்று காலை 9 மணி அளவில் கடையை திறக்க வந்த போது கடையின் இரும்பு ஷட்டர் வெல்டிங் மிசினால் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
உடனடியாக அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது நகை கடையில் வைத்திருந்த ஒன்பது கிலோ தங்க நகை மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரக்கல் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி, புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் தொடர்பாக நான்கு உதவி ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.