ஐ.டி. ஊழியர் வீட்டில் 62 பவுன் அபேஸ்…!

செங்கல்பட்டு அருகே ஐ.டி. ஊழியரின் வீட்டில் 62- சவரண் நகையை கொள்ளையடித்த திருடர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுத்தேரியில் ஷயாம் என்பவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இதனிடையில் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

சாமி தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 62 பவுன் நகை மற்றும் பூஜை அறையிலிருந்த 8- கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.46 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் செய்த கொள்ளையர்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரத்தை வைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கொள்ளை சம்பவம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,மேலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டல் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரி உண்மையாகி வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் பேசப்பட்டுவருகிறது.