வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி முகநூலில் அருள்ராஜ் என்பவரிடம் பழகியுள்ளார். பின்னர் அருள்ராஜை காதலிப்பதாகக் கூறியுள்ளார். மகாலட்சுமியின் ஆசை வார்த்தைகளை நம்பிய அருள்ராஜ் அவரை உண்மையாக காதலித்துள்ளார்.
இதையடுத்து பெற்றோரிடம் பேசி திருமணம் செய்ய அனுமதி வாங்கிய அருள்ராஜ் கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி அன்று மகாலட்சுமியை கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து 4 மாதத்திற்குப் பிறகு, ‘சென்னையில் தனது தோழிக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். நான் அவரை பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு மகாலட்சுமி சென்றுள்ளார். மறுநாள் காலையில் அருள்ராஜ் பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூபாய் 85 ஆயிரம் ரொக்க பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
செல்போன் மூலம் மகாலட்சுமியை பலமுறை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அருள் ராஜ் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்று மகாலட்சுமி கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10 ஆண்களிடம் கைவரிசையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரித்த பிறகுதான் எத்தனை ஆண்கள் மகாலட்சுமியிடம் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும்.