கிருஷ்ணகிரி மாவட்டம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். 31 வயதான இவர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 8-ஆம் தேதி அன்று, பொது குடிநீர் தொட்டியில், தனது உடைகளை துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, இதுகுறித்து பிரபாகரனிடம் கேட்டுள்ளார்.
இதன்காரணமாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்து இருவரும் களைந்து சென்றனர். ஆனால், பகையை மறக்காத சின்னசாமி, தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு, பிரபாகரனிடம், அன்று மாலையும் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக்கம்பியால் ராணுவ வீரனை தாக்கினர். இதில், படுகாயம் அடைந்த பிரபாகரன், ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திமுக கவுன்சிலர் உட்பட 2 பேரை கைது செய்தனர். இதனை அறிந்த சமூக வலைதள பயன்பாட்டாளர்கள், Justice For Prabhu என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
மேலும், குண்டர்களின் ஆட்சி தான் திமுகவின் தலைமையின் கீழ் நடக்கிறதா என்றும், வடமாநில ஊடகங்களில், அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த உயிரிழப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்தவொரு அறிக்கையும், சமூக வலைதள பதிவையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.