பல்லாவரம் அருகே நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வடமாநில இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி சாமுண்டீஸ்வரி நகர் துளசிங்கம் தெருவில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி தோல் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜாஸ்மொய்தீன் (வயது 26) என்பவர் தங்கி அங்குள்ள தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் தங்கி இருக்கும் அறை அருகே அதே மாநிலத்தை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது.
அவர்களது நான்கு வயது பெண் குழந்தை வீட்டில் தனியாக இருந்த பொழுது ஜாஸ்மொய்தீன் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அக்கம்பக்கத்தினர் தர்ம அடி கொடுத்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதில் ரத்த காயம் அடைந்த குழந்தையை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் புகார் செய்த நிலையில் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வட மாநில வாலிபர் ஜாஸ் மொய்தீனை கைது செய்தனர். பிறகு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.