நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கதிரவன் (55). இவர் 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றினார்.
இவர் ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சென்னையில் நடை பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.