80-களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் பிரபு, மார்கெட் குறைய ஆரம்பித்ததால், குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, அந்த கதாபாத்திரங்களிலும், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 20-ஆம் தேதி அன்று, உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரபுவிற்கு சிறுநீரக கல் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், பிரபு தற்போது பூரண நலத்துடன் உள்ளார் என்றும், ஓரிரு நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளது.