கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி பகுதியில் டிராக்டர் மீது சொகுசு பேருந்து மோதியதில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
தர்மபுரி மாவட்டம் நூலஹல்லி தாலுக்கா சவுளூர் கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் ஆந்திர மாநிலம் வீகோட்டா கிராமத்தில் கற்றாழை அறுக்கும் பணிக்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த எர்ரஹள்ளி கிராமம் அருகே சென்ற பொழுது சிவகாசியில் இருந்து பெங்களூர் நோக்கி வேகமாக சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட முத்து, மல்லி, முனுசாமி, வசந்தி மற்றும் 3 மாத பெண் குழந்தை வர்ஷினி ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவேரிபட்டினம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேரை மீட்டு காவேரிபட்டினம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.