முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு நேர்காணல் ஒன்றில் கலந்துக் கொண்டார். அதில், பல்வேறு சுவாரசியமான கேள்விகளுக்கு, தன்னுடைய அழுத்தமான பதில்களை வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு முதலமைச்சர் வழங்கிய பதில்களும் பின்வருமாறு:-
கேள்வி:- பிறந்தநாளில் தொண்டர்கள் கொடுத்த பரிசில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது ??
பதில்:- உங்களின் ஒருவனாக என்னை தலைவராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இல்லை.
கேள்வி:-கூட்டணி கட்சித் தலைவர்களை பற்றிய உங்களின் கருத்து ?
பதில்:- தோள் கொடுப்பான் தோழன் என்பதற்கு அடையாளம் கூட்டணி கட்சித் தலைவர்கள்.
கேள்வி:- நான் முதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு கிராமப்புற மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ளதா ?
பதில்:- விழிப்புணர்வு நல்லாவே ஏற்பட்டுள்ளது. இந்த திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தான். முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு தான் “நான் முதல்வர் திட்டம்“ அதிகம் தேவை. இந்த திட்டம் எனது தொடர் கண்காணிப்பில் உள்ளது.
கேள்வி:- வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றி குறித்து?
பதில்:- வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் தேர்தல் வியூகங்கள் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பாஜக. கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் பாஜகவுக்கு வெற்றி கிடைத்து இருக்காது. ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு காதுகள் இல்லை என்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை நேரடியாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் டெல்லி துணை முதல்வர் கைது.
கேள்வி:- கீழடி அருங்காட்சியகம் பணிகள்?
பதில்:- கீழடி அருங்காட்சியகத்தை நேரில் சென்று பாருங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் மன்றத்தில் தொடர்ந்து கீழடி குறித்து பேசினோம். அடிக்கல் நாட்டும் எந்த பணியும் நடைபெறாமல் இருந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கீழடியில் பணிகள் நடந்து முடிந்துள்ளது.
உலகத் தமிழர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது கீழடிக்கு வந்து பார்வையிட வேண்டும். நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் தயாராகி வருகிறது.
கேள்வி:- பெண்களின் சமூக பங்களிப்பு?
பதில்:- பெண்கள் சமூக பங்களிப்பை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும். பெண்கள் குறித்த ஆண்களின் பார்வையில் மாற்றம் வேண்டும். இதுதான் ஆண்களுக்கு நான் சொல்லும் அறிவுரை.
கேள்வி:- வடமாநில தொழிலாளர்கள்?
பதில்:- தமிழ்நாட்டில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்கிறார்கள் அவர்களுக்கு எந்த காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. சிலர் போலி வீடியோக்களை தயாரித்து வதந்தியை பரப்பி உள்ளனர் வட மாநிலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் இதை செய்தது உள்நோக்கம் கொண்டது. அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணை வேண்டிய அவசியத்தை சொன்ன மறுநாளே இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தால் பின்னாடி இருக்கக்கூடிய சூழ்ச்சி புரியும்
கேள்வி:- பாஜகவின் வளர்ச்சி என்ன?
பதில்:- இந்தியாவை வளர்த்துள்ளோம் என்று பாஜக சொல்வது எதை தெரியுமா பாஜக ஆட்சிக்கு வரும்போது 2014 ல் சிலிண்டர் விலை 414 ரூபாய். இப்போது சிலிண்டரின் விலை 1118.50 ரூபாய். 72 ரூபாய்க்கு இருந்த பெட்ரோல் விலை இப்போது 102 ரூபாய். 55 ரூபாய்க்கு இருந்த டீசல் விலை எப்போது 94 ரூபாய். 2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசுக்கு இருந்த கடன் 54 லட்சம் கோடி இப்போது இருக்கும் கடன் 147 லட்சம் கோடி கடன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதுதான் பாஜகவால் இந்தியா அடைந்த வளர்ச்சி.