வடஇந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஹோலி. கலர் கலரான பொடிகளை தங்களுக்கு பிடித்தமானவர்களின் முகத்தில் பூசி, தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில், இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.
இவ்வாறு மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை அன்று, பெரும் தகராறு ஏற்பட்டு, அது கொலை செய்யும் அளவிற்கு விபரீதமாக மாறியுள்ளது. தெலங்கானா மாநிலம் மாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அம்பா தாஸ். இவருக்கு முகமது அப்துல் ஷபீர் என்ற நண்பர் உள்ளார்.
இந்நிலையில், ஹோலி பண்டிகையையொட்டி, அம்பா தாஸ், தனது நண்பரின் முகத்தில் வண்ணப்பொடியை பூச வந்துள்ளார். ஆனால், அதற்கு ஷபீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், நண்பன் மீது கலர் பொடியை அம்பா தாஸ் பூசியுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ஷபீர், இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஊற்றி, தனது நண்பனை எரித்துள்ளார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அம்பா தாஸ்-ஐ மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 40 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவர், ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஷபீரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.