மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவரும் உதயா என்ற பெண்ணும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இதுமட்டுமின்றி, அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உதயா கர்ப்பம் தரித்த நிலையில், இருவரும் தனிக்குடித்தனம் சென்று, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மதியம் கணவருக்கு செல்போனில் அழைப்பு விடுத்த உதயா, அன்போடும், ஆசையோடும் பேசியுள்ளார்.
பின்னர், வீட்டின் கதவை மூடிக் கொண்ட உதயா, நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்த கதவை உடைத்து பார்த்தபோது, மின்விசிறியில் உதயா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்த பிரித்விராஜ், கதறி அழுதுள்ளார். மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ள உதயாவின் தாயார், “பிரத்விராஜின் தாய் தான் இதற்கு காரணமாக இருக்கலாம்” என்றும் கூறியுள்ளார். தற்போது, இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. காதல் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வந்த கர்ப்பிணி பெண், திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.