தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே சென்னை புறநகர்பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், திருப்பூர், சேலம், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. தொடர் மழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்று 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டை போன்று கர்நாடகாவிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் உபரிநீர் 28 ஆயிரம் கன அடிதண்ணீர் அப்படியே, காவிரியில் திறந்துவிடப்படுகிறது. நீர்திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் சூழல் இருக்கிறது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையுடன் இருக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சென்னையில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. தேனாம்பேட்டை, மயிலாப்பூர், மந்தவெளி, அடையாறு, கிண்டி, தியாகராயநகர் பகுதியில் இரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல், புறநகர் பகுதியிலும் மிதமான அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இதனால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.