கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரலில் நடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்.பி.யாக இருந்து வந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வயநாட்டில் இன்றைய தினம் கருப்பு நாளாக கடைப்பிடிக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாகவும், சட்டப்படியும் எதிர்கொள்வோம். சூரத் கோர்ட்டு தீர்ப்பே இறுதியானது அல்ல. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் மீது காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது என கேரள எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசை சேர்ந்த வி.டி. சதீசன் கூறியுள்ளார்.