சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நெடுஞ்சாலையில் பிரதமர் மோடியின் படத்தை எரித்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது கண்டித்தும் அவரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும் நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் காங்கேயம் குமார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.