பிரேசில் நாட்டின் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில், கல்லறை தோட்டம் ஒன்று உள்ளது. அந்த கல்லறை தோட்டத்தில் உள்ள கல்லரை ஒன்றில் இருந்து பெண்ணின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. கல்லறையை தோண்டும் பணி செய்யும் ஊழியர்கள், இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கல்லறையின் உள்ளே பார்த்துள்ளனர். அப்போது, தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், பெண் ஒருவர் கிடந்துள்ளார். அவரை மீட்ட காவல்துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதையடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய அவர்கள், எப்படி உள்ளே சிக்கிக் கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த அந்த பெண், “இரண்டு நபர்கள் என்னை பலமாக தாக்கிவிட்டு, நான் மயங்கிய பிறகு, என்னை உயிருடன் புதைத்து விட்டார்கள்” என்று கூறினார்.
ஆனால், அந்நாட்டு காவல்துறையினர் கூறியுள்ள தகவலின்படி, “இந்த பெண்ணுக்கும், அந்த இரண்டு நபர்களுக்கும், போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தான், இவ்வாறு செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.