கிருஷ்ணகிரி அருகே தொடர் மழையால் ஊருக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலை பாம்பு..!

கிருஷ்ணகிரி பகுதியில் இன்று மாலை முதல் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வன பகுதியில் இருந்து மலை பாம்பு, சாரப்பாம்பு, கீரிப்பிள்ளை, யானைகள் போன்ற வன உயிரினங்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது அடிக்கடி நிகழ்கிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகளில் இன்று தொடர் மழை பெய்து வரும் நிலையில் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் புதிய குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கண்ட பொது மக்கள் கிருஷ்ணகிரி வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வன சரகர் ரவி உத்தரவின் பேரில் வன காவலர் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பழனிசாமி, மாதப்பன், ஆகியோர் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.

மலை பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தில் இது போன்ற விஷ ஜந்துக்கள் பல ஆண்டுகளாக வருவதும் இதனால் பொது மக்கள் அச்சத்துடனும் வாழ்வதும் தொடர்ந்து வருகிறது.

மலை பகுதியில் இருந்து வன உயிரினங்கள் ஊருக்குள் வருவதை தடுக்க கிராம பகுதியை ஒட்டி கனிம வள துறை மற்றும் வன துறையின் மூலமாக தடுப்பு சுவர் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.