30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக மதுவந்தி காவல் நிலையத்தில் புகார்..!

ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டில் இருந்த 30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பைனான்ஸ் துறையினர் எடுத்துச் சென்று விட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் மதுவந்தி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைன் பைனான்ஸ் நிறுவனம் மூலம் ஆசியானா அப்பார்ட்மெண்ட் பகுதியில் பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். இதற்காக ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இந்த கடனை பல மாதங்களாக செலுத்தாமல் அலை கழித்து உள்ளார் மதுவந்தி. அதன் பிறகு தனியார் பைனான்ஸ் நிறுவனமானது மதுவந்தி இல்லத்திற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் அளிக்காததால் நீதிமன்றம் உத்தரவுப்படி சீல் வைப்பதற்காக காவல்துறை உதவினனுடன் சீல் வைத்து சென்றனர்.

அதன் பிறகு பைனான்ஸ் நிதி நிறுவனமானது ஒரு மாதத்திற்குள் தங்களின் பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பொருட்களை எடுக்காமல் மதுவந்தி காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்துஜா லீலாண்ட் பைனான்ஸ் நிறுவனம் வீட்டினை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டுள்ளனர். ஏலத்திற்கு பிறகு மதுவந்தி தனக்குத் தெரியாமல் தனது பொருட்களை எடுத்து வைத்து விட்டதாகவும், அதில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடு போய் உள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பைனான்ஸ் கம்பெனியின் மண்டல மேலாளர் உமாசங்கர் மற்றும் கார்த்திகேயன் உட்பட 10 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும், காணாமல் போன 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மீட்டு தரும்படியும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.