நாடாளுமன்ற தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப் பதிவு, கடந்த 1-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தல் முடிந்த அதே நாளில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை, பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டன.
இந்த கருத்துக் கணிப்புகளில், பாஜக அமோக வெற்றி பெறும் என்று அனைவரும் கூறியிருந்தனர். ஆனால், கடந்த 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின் படி, பாஜக, தனிப் பெரும்பான்மையை கூட பெறாமல், வெறும் 240 தொகுதிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்தமாக, தேசிய ஜனநாயக கூட்டணி, 292 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் மூத்த தலைவர், செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது அவர் பேசியது பின்வருமாறு:-
“தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும், வெளிநாட்டு முதலீட்டுக்கும் தொடர்பு உள்ளது. பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட கருத்துக் கணிப்பை திணித்துள்ளனர். பங்குச் சந்தையில் ரூபாய் 38 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் பணம் சம்பாதிக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் உதவியுள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்களை விசாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியான மறுநாள் பங்குச் சந்தைகள் 3.39 சதவீதம் உயர்ந்தன. வாக்கு எண்ணிக்கை அன்று, பங்குச் சந்தைகள் 6 சதவீத சரிவு கண்டன” என்று கூறினார்.
“கருத்துக் கணிப்பை மையப்படுத்தி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மோடியும், அமித் ஷாவும் பரிந்துரை செய்தனர். பொறுப்புள்ள பதவியில் அமர்ந்துக் கொண்டு போலியான கருத்துக் கணிப்பை காட்டியுள்ளனர். மோடி, அமித் ஷாவின் பேச்சால், பங்குச் சந்தையில் அதிக முதலீடு நடந்துள்ளது” என்று விமர்சித்தார்.