புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் கிருஷ்ணா நகர் பகுதியில் மாணவிகள் விடுதி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விடுதியில் வழங்கப்படும் உணவில் புழுக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் செத்து கிடப்பதாக மாணவிகள் குற்றம்ச்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பலமுறை புகாரிளித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாணவிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் இங்கு போதிய குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியில்லை என்றும், போதிய படுக்கை வசதியில்லாததால் மாணவிகள் சமையல் அறை மற்றும் உணவு உண்ணும் கூடத்தில் படுத்து உரங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஒட்டுமொத்த விடுதி மாணவர்களையும் ஒன்று திரட்டி புதுச்சேரி அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.