சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள 8 அடுக்குமாடி குடியிருப்பில் எழில்நகர் 103வது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் 22 வயதான கார்த்திக் வசித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய நண்பரான ராஜேஷ் என்பவருக்கு ரூபாய் 1000 கடனாக கொடுத்துள்ளார் கார்த்திக்.
இந்நிலையில் நேற்று இரவு ராஜேஷை பார்த்த கார்த்திக் நான் கொடுத்த 1000 ரூபாய்யை கொடு நான் மதுபாட்டில் வாங்க போகிறேன் என்று கூறி கேட்டுள்ளார்.
அதற்கு ராஜேஷ் என்னிடம் பணம் இல்லை என கூற கார்த்திக் ராஜேஷை அடித்துள்ளார். உடன் இருந்த தினேஷ் என்ற நண்பன் கார்த்திக் மற்றும் ராஜேஷ் இருவரிடமும் சமாதானம் பேசி அங்கிருந்து தினேஷ் வீட்டிற்கு ராஜேஷை அழைத்து சென்றுள்ளார்.
சுமார் 30 நிமிடம் கழித்து தினேஷ் வீட்டில் ராஜேஷ் இருப்பதை தெரிந்து கொண்ட கார்த்திக் தினேஷ் வீட்டின் கதவை வெகு நேரமாக தட்டியுள்ளார்.
வீட்டில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ராஜேஷ் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் கார்த்தியின் வயிற்றில் குத்தியுள்ளார்.
கார்த்திக் வயிற்றில் கத்திரிக்கோலால் குத்தியதும் இரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனே கார்த்திக்கை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து ஆட்டோவில் கார்த்திக் உடலை ஏற்றிக் கொண்டு பொரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்ற ராஜேஷ் நடந்த சம்பவத்தை கூறி பின்னர் அவனது உடல் காவல் நிலையத்தின் வெளியில் ஆட்டோவில் தான் உள்ளது என்று ராஜேஷ் கூறியதை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கொலையான கார்த்திக் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.