மயிலாடுதுறை நகராட்சி, கச்சேரி சாலையில் உள்ள மளிகைக் கடையில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று இரவு 20 லிட்டர் தண்ணீர் கேன் வாங்க வந்துள்ளார். அப்போது, அந்த கேனில் உயிருடன் ஒரு குட்டி தவளை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து, உடனடியாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறைக்கும் புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
தண்ணீரில் தவளை இருப்பது உறுதி செய்யப்பட்டாலும், கேனின் மூடி பிரிக்கப்பட்டிருந்ததால், தண்ணீர் விநியோகம் செய்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என அதிகாரிகள் கூறினர். தொடர்ந்து ஆய்வு செய்ததில், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிற வாட்டர் கேன்களில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் உள்ள அந்த தனியார் நிறுவனத்தை ஆய்வு செய்ய நேரில் சென்றனர். அப்போது, காலி கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் தவளை, நத்தை மற்றும் மரவட்டை போன்றவை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து விளக்கம் கேட்டு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேனில் தவளை உயிருடன் இருந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.