இந்தியாவின் மாபெரும் ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தல், ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் கூறியிருந்தது.
இந்த 7 கட்டங்களில், முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 5 கட்ட தேர்தல்கள், மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில், பாஜகவிற்கு வித்தியாசமான முறையில் பிரச்சாரம் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, நந்திகந்தி நரசிம்மலு மற்றும் நந்திகந்தி நிர்மலா என்ற தம்பதியினர், தங்களது ஒரே மகனுக்கு திருமண விழாவை நடத்தியுள்ளனர்.
இந்த திருமண விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், “நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக ஆக்குவது தான், மணமகனுக்கும், மணமகளுக்கும் கொடுக்கும் பரிசு. ஏனென்றால், நமது எதிர்கால இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழ் குறித்து அறிந்த தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கும் அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினரும் வழக்கு பதிந்துள்ளனர்.
