கேரள மாநிலத்தில், 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், அன்வர் (24) என்ற நபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 6 மாதங்களாக பழகி வந்துள்ளார்.
இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி, அன்வரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இருப்பினும் தன்னுடன் பேசுமாறு அன்வர், தொடர்ந்து சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளார்.
இதே போல் கடந்த 23ம் தேதி அன்றும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த சிறுமியை அன்வர் பின்தொடர்ந்து வந்துள்ளான். அப்போது, தன்னுடன் மீண்டும் பேசாவிட்டால், சிறுமியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், அவரது தந்தையை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.
இதனால் அச்சமடைந்த சிறுமி, வீட்டுக்கு வந்ததும் விஷம் அருந்தியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பெங்களூருவில் தலைமறைவாக இருந்த அன்வரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அன்வரின் கூட்டாளிகள் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.