தாராபுரம் அருகே, காலாவதியான மாத்திரையை சாப்பிட்ட மாணவி மயக்கம் அடைந்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன். இவரது மகள், அரசு உதவி பெறும் பள்ளியில், 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக, அலாவுதீனின் மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவரை நாடாத பெற்றோர், மருந்துக் கடையில், மாத்திரியை வாங்கி, தனது மகளுக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால், அந்த மருந்தை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, சிறுமி வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, பதறிய பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காலாவதியான மாத்திரியை சாப்பிட்டதே, சிறுமியின் மயக்கத்திற்கு காரணம் என்று தெரிவித்தனர். தற்போது, சிகிச்சை பெற்று வரும் அந்த சிறுமி, ஆபத்தான கட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.