சென்னை போரூர் பகுதியை சேர்ந்த கோதண்டராமன் என்பவர், மதுரவாயல் பகுதியில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில், பிச்சைக்காரன் 2 திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். டிக்கெட் கவுண்டரில் 3 டிக்கெட் வேண்டும் என்று கூறிய அவர், 2 ஆயிரம் நோட்டை நீட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த திரையரங்க ஊழியர், ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பி வாங்கிக் கொள்ள இருப்பதால், அதனை திரையரங்குகளில் வாங்குவதில்லை என்று கூறியுள்ளனர். மேலும், இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு பலகையில் கூறிவிட்டோம் என்றும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.
இதனால், கடும் கோபம் அடைந்த கோதண்டராமன், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், எல்லா இடங்களிலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும் நிலையில், திரையரங்குகளில் மட்டும் ஏன் வாங்க மறுக்கிறீர்கள் என்று கூறினார்.
இதோடு மட்டுமின்றி, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, புகாரும் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.