கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்தவர் க்ரிஷ். 18 வயதான இவர், 9-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நூல் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும், இவரது பெரியப்பாவின் மகள் நாகம்மாவும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து, முறையற்ற காதலை கைவிடுமாறு க்ரிஷிடமும், நாகம்மாவிடமும் தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் சில நாட்கள் பேச்சுவார்த்தையை நிறுத்தியிருந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக க்ரிஷ் ஊருக்கு வந்தபோது, நாகம்மா மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்.
க்ரிஷின் வீட்டில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, நாகம்மாவின் தந்தை பசப்பா, தனது உறவினர்கள் சிலருடன் உள்ளே வந்து, க்ரிஷை சரமாரியாக தாக்கியுள்ளார்.
உறவினர்கள் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான க்ரிஷ், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து க்ரிஷின் தாய் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பசப்பா உட்பட உறவினர்கள் 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.