சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த இவர், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், பதற்றம் அடைந்த அவரது மனைவி, காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், சுரேஷை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கிடப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது, உயிரிழந்த கிடந்தவர் சுரேஷ் என்பது தெரியவந்தது.
பின்னர், அவரிடம் இருந்து கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில், “காலில் மண்டியிட்டு கேட்கிறேன்.. ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தயவு செய்து தடை விதிக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு, ரூபாய் 16 லட்சம் வரை இழந்ததும், இதன்காரணமாக ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்துக் கொண்டதும் தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.