கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பவுசியா. 20 வயதான இவர், தனியார் கல்லூரி ஒன்றில் செவிலியருக்கான படிப்பை 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் தனது காதலன் ஆஷிக்கை, நேற்று காலை 10 மணிக்கு சந்தித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, தனது காதலனின் செல்போனை, பவுசியா பரிசோதனை செய்துள்ளார்.
அதில், ஆஷிக் பல்வேறு பெண்களுடன், நெருக்கமாக இருக்கும் வீடியோ இருந்துள்ளது. இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே, பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் கோபம் அடைந்த ஆஷிக், பௌசியாவின் கழுத்தை நெறித்து, கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, தனது காதலியை கொலை செய்துவிட்டேன் என்று, வாட்ஸ் அப்பிலும் ஸ்டேடஸ் வைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பௌசியாவின் தோழிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதன்பேரில் அங்கு சென்ற அவர்கள், பௌசியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, செல்போன் சிக்னல்களின் உதவியுடன், ஆஷிக்கை கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, பௌசியாவிற்கு 16-வயது இருக்கும்போதே இருவரும் திருமணம் செய்துக் கொண்டார்களாம். மேலும், பௌசியா கர்ப்பமும் அடைந்துள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த காவல்துறையினர், அப்போதே ஆஷிக்கை, போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். அதன்பிறகு, பௌசியாவிற்கு பிறந்த குழந்தை, அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நர்சிங் படிப்பதற்காக, அவர் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில், இருவரும் மீண்டும் சந்தித்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.