“நைட்டு தனியா இருந்தாங்க.. கழுத்துல ஏறி மிதிச்சேன்” – 6 மாதத்திற்கு பிறகு சிக்கிய கொலைகாரன்!

தாம்பரம் மதுரபாக்கம் அருகே உள்ள வனப்பகுதியில், அழுகிய நிலையில், சடலம் ஒன்று கிடப்பதாக, காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அந்த சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், உயிரிழந்தது யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதில், உயிரிழந்தவர் அகரம்தென் பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பதும், கடந்த மே மாதம் முதல் காணவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்திருந்தனர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் செல்போன் காணவில்லை என்பதையும், அதை திருடிய நபர் தான் கொலையாளியாக இருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்தனர். அந்த கோணத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அந்த செல்போனின் IMEI எண்ணை வைத்து, கொலையாளியை கண்டறிந்தனர்.

பின்னர், அவரை கைது செய்த காவல்துறையினர், என்ன நடந்தது என்று கொலையாளியிடம் விசாரித்தனர். அதில், அந்த பெண் இரவு தனியாக நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, மது அருந்த பணம் இல்லாததால், அவரது Hand Bag-ஐ பறிக்க முயற்சி செய்தேன். ஆனால், அந்த பெண் கத்தி கூச்சலிட முயன்றார்.

இதனால், அவரை கீழே தள்ளி, கழுத்தில் ஏறி மிதித்து, கொலை செய்துவிட்டேன். பின்னர், அவரிடம் இருந்த செல்போனையும், 700 ரூபாய் பணத்தையும், எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.