இத்தாலி நாட்டில் உள்ள வொரோனா பகுதியை சேர்ந்தவர் ஹெல்கா மரியா. இவர் தனது மகனுடன், குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். மரியாவுக்கு 86 வயதாவதால், அரசு சார்பில், மாதந்தோறும் பென்ஷனும் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, உடல்நலக்குறைவு காரணமாக, அந்த மூதாட்டி உயிரிழந்தார். இதனை அறிந்த அவரது மகன், இந்த தகவல் அரசாங்கத்திற்கு தெரிந்துவிட்டால், பென்ஷன் பணம் கிடைக்காது என்று யோசித்துள்ளார். இதனால், தாய் இறந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்காத அவர், உடலை வீட்டிலேயே பதப்படுத்தி வைத்துள்ளார்.
இதையடுத்து, மாதந்தோறும், பென்ஷன் பணத்தை, வங்கிக் கணக்கில் இருந்து எடுத்து வந்துள்ளார். இவ்வாறு 6 வருடங்களாக பணத்தை அவர் எடுத்து வந்த நிலையில், அரசு அதிகாரிகளுக்கு, திடீரென சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்று, சோதனை நடத்தியுள்ளனர்.
அதில், அவர் 6 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் என்றும், பென்ஷன் பணத்திற்காக, மகன் இதனை வெளியே சொல்ல மறுத்துவிட்டார் என்றும் தெரியவந்தது. பின்னர், மரியாவின் மகனை கைது செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, 1.56 லட்சம் யுரோ பணத்தை, அரசிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில், 1.56 கோடி ரூபாயை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.