ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள ஐடி கம்பெணி ஒன்றில் பணியாற்றி வந்தவர் அமன் ஜங்ரா. இவருக்கும், அதே கம்பெணியில் பணியாற்றி வந்த விஷால் சிங்கிற்கும் இடையே, அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதுதொடர்பாக அந்நிறுவனம், இருவரையும் எச்சரித்தும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த புதன் கிழமை அன்று, அமன் ஜங்ரா நிறுவனத்திற்கு வந்துள்ளார். அப்போது, அமன் ஜங்கராவின் நாற்காலியில், விஷால் சிங் அமர்ந்திருந்ததால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கம்பெணி நிர்வாகம், அன்றைய தினமே, இருவரையும் வேலையில் இருந்து பணிநீக்கம் செய்துள்ளது.
வெளியே வந்த பின்னரும் இருவரும் சண்டையை தொடர்ந்த நிலையில், அமன் ஜங்ரா தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, விஷால் சிங்கை சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார்.
விஷால் சிங்கின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, விஷால் சிங் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.