கடந்த திங்கள்கிழமை அரியாணா மாநிலம், நூ மாவட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊா்வலம் நடைபெற்றது. சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊா்வலத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்த தகவல் பரவிய நிலையில் நூ மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டமான குருகிராமின் சோனா நகரிலும் இரு சமூகத்தினரிடையே கலவரம் மூண்டது.
ஒருவருக்கொருவா் கற்களை வீசி தாக்கிக்கொண்டதோடு, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைத்தனா்.
இது குறித்து பெண் நீதிபதியுடன் சிக்கிய உதவியாளர் டேக்சந்த் கூறியதாவது:
சுமார் 150 பேர் கொண்ட ஒரு கும்பல் எங்களை சாலையில் சூழ்ந்தது. எங்கள் வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. காரிலிருந்து எங்களை இறங்கச் சொல்லிவிட்டு வாகனத்திற்கு அக்கும்பல் தீவைத்தது. இதனால், மிகவும் அச்சமுற்று நாங்கள் அங்கிருந்த அரசு போக்குவரத்து பணிமனையில் தஞ்சமடைந்து உயிர்தப்பினோம். உள்ளூரின் சில வழக்கறிஞர்களுக்கு போன்செய்து வரவழைத்து அவர்கள் உதவியால் வீடு வந்து சேர்ந்தோம். இவ்வாறு டேக்சந்த் தெரிவித்தார்.
மாநிலத்தில் 5 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. நூ, பரிதாபாத் மற்றும் பல்வால் மாவட்டங்கள் மற்றும் குருகிராமின் துணைப் பிரிவுகளில் ஆகஸ்டு 5 வரை இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
இந்த வன்முறையால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.