புதுச்சேரி-கடலூர் இ சி ஆர் சாலையில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி காட்சி பொருளாக உள்ளது. இதனால் போக்குவரத்தை சீரமைக்க தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்பட்டும் வருகிறது. மேலும் நள்ளிரவு நேரங்களிலும் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே போக்குவரத்து போலீசார் இந்த போக்குவரத்து சிக்னலை சீரமைத்து செயல்பட வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பத்தில் நூதன போராட்டம் நடைபெற்றது. அப்போது செயல்படாமல் காட்சி பொருளாக உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதில் அடிக்கடி இந்த சிக்னல் பழுதாகி வருவதால் தரமான மதர்போர்டு அமைக்க வேண்டும். போக்குவரத்து போலீசர்கள் தங்களது கடமையை சரிவர செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.