நாமக்கல் மாவட்டம் வெப்படை அடுத்த எலந்தகுட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருச்செங்கோடு சாலையில் உள்ள தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
தினசரி சிவகுமார் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம், இந்நிலையில் இன்று காலை சிவக்குமார் தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வேலைக்கு செல்வதற்காக குமாரபாளையம் சாலை வழியில் வந்து கொண்டிருந்தபோது அப்போது திடீரென அவர் இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு முன்பக்கம் இருந்து பாம்பு ஒன்று தலையைக் காட்டியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அலறி அடித்து வண்டியை கீழே போட்டுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சிவகுமாரிடம் விசாரிக்க தனது வாகனத்தில் இருந்து பாம்பு ஒன்று தலையை காட்டியதை சொல்லி உள்ளார்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள இரு சக்கரம் வாகனம் பழுது பார்க்கும் நபரைக் கொண்டு வண்டியில் பாம்பை தேடிய போது பாம்பு கண்ணுக்கு சிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சிவக்குமார் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து தள்ளிச்சென்று வெப்படையில் உள்ள தீயணைப்பு வீரர்களிடம் தனது இருசக்கர வாகனத்தில் பாம்பு உள்ள விபரத்தை சொல்லி உள்ளார்.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் வாகனத்தில் புகுந்த பாம்பினை வெளியேற்றுவதற்காக ஸ்பிரே அடித்துள்ளனர். ஸ்பிரே அடித்தும் பாம்பு வெளியில் வராத நிலையில், இருசக்கர பேனட்டை கழட்டி சுமார் ஓரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்துள்ளனர்.
இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து பிடிப்பட்ட பாம்பு ஒன்றை அடி உள்ள சாரப்பாம்பு குட்டி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருச்செங்கோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.