பள்ளி முடிந்து பேருந்தில் ஏற முயன்ற மாணவன் தவறி விழுந்து படுகாயம்

வத்திராயிருப்பில் பள்ளி முடிந்து பேருந்தில் ஏற முயன்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார் .பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பட்டிஓடை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரது மகன் நிர்மல் கிருஷ்ணன். இவர் வத்திராயிருப்பு தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு வத்திராயிருப்பிலிருந்து- ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசு பேருந்தில் பிள்ளையார் கோவில் வளைவில் முன்பக்க படிக்கட்டில் ஓடிப்போய் ஏற முயன்றார். அப்போது தவறி விழுந்து பின்பக்க டயரில் சிக்கி இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார்.பின்னர் அவரை மீட்டர் பொதுமக்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.தொடர்ந்து இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.