கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள கஞ்சாணி என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் இருந்து வினயன் 8 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு வரை ரூ.8,70,000 வங்கிக்கு அவர் திரும்பச் செலுத்தியுள்ளார்.
ஆனால் 2016-ம் ஆண்டிற்குப் பிறகு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அவர் பணத்தை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து வந்த கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக வங்கி கடனை கட்ட முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் தனியார் வங்கி தரப்பில் வட்டிக்கு மேல் வட்டி போட்டு சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கட்ட வேண்டும் என வங்கி தரப்பில் இருந்து விஷ்ணுவிற்கு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், ஒரு வார காலத்திற்குள் பணத்தைச் செலுத்தாவிட்டால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என வங்கி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வங்கிக்குச் சென்றிருந்த விஷ்ணு, பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாகவும் இல்லையென்றால் வீட்டைக் காலி செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, வங்கியில் இருந்து வீடு திரும்பிய வினயன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அறைக்குள் சென்ற விஷ்ணு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி தரப்பில் அளிக்கப்பட்ட நெருக்கடியால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.