கோவை மாவட்டத்தில் தடாகம், மாங்கரை, மருதமலை, பெரியநாயக்கன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அடிக்கடி தென்படுகிறது.
வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதிகளில் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதும், விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கதிர்நாயக்கன் பாளையத்தில் நள்ளிரவில் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று ஊருக்குள் உலா வந்தது. அப்போது வாழை உள்ளிட்ட மரங்களை சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு ஊருக்குள் வந்து வாழை உள்ளிட்டவற்றை காட்டுயானைகள் ருசி பார்த்தால் அடிக்கடி ஊருக்குள் வரும் எனவும் வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.