மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராக வசந்தி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021 ம் ஆண்டு சிவகங்கையை சேர்ந்த அர்சத் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் வழிப்பறி செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக வசந்தி மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. பிறகு வசந்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த வசந்தி தனது மீதான வழக்கில் உள்ள சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அர்சத் தரப்பின் முக்கிய சாட்சியான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ஒருவரை வசந்தி மிரட்டியுள்ளார்.

இந்த புகார் காரணமாக வசந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வசந்தியை காவல்துறை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி மதுரை சரக டிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.