மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக மாறி நிற்கிறது. வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், படகுகள் மூலம் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த அவர், நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “பல இடங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை. சென்னை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை வடிகால் வசதிகளைப் பொறுத்தவரை திட்டமே இல்லாமல் செலவு செய்துள்ளனர். ரூ.4000 கோடியை எதற்காக செலவு செய்தார்கள், எங்கு செலவு செய்தார்கள் என்றே தெரியவில்லை. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும். சென்னையில் நோய் தொற்றை தடுக்க அனைத்து இடங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.