அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் சம்மன் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அவர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
எதிர்வரும் 29-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி ரம்யாவும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.