தேனி மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். முதல் நிலை காவலரான இவர், கடந்த 27-ஆம் தேதி அன்று, மதுபான கடைக்கு மது அருந்துவதற்கு சென்றுள்ளார். அப்போது, முத்துக்குமாருக்கும், கஞ்சா வியாபாரி பொன்வண்ணன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்கிருந்து கிளம்பிய முத்துக்குமாரை, மர்ம நபர்கள் சிலர், கல்லால் தாக்கி, கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், முத்துக்குமாரின் கொலைக்கு, பொன்வண்ணன் தான் காரணம் என்று தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், கம்பம் வனப்பகுதியில் அவர் பதுங்கி இருப்பதை அறிந்த காவல்துறையினர், அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறையினரை தாக்கிய பொன்வண்ணன், அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், கஞ்சா வியாபாரியை, காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர். காவலரை கொலை செய்த கஞ்சா வியாபாரி, என்கவுண்ட்டர் செய்யப்பட்டிருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.